புதுடில்லி: நோட்டு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆண்டையொட்டி நாளை தர்ணா செய்ய காங். திட்டமிட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. அதன்படி நாட்டில் உயர் மதிப்பு கொண்ட ரூ.500 மற்றும் ரூ.1000 தாள்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் நோக்கில், இந்தநடவடிக்கை எனவும் கூறப்பட்டது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்ததற்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி, நாடு முழுவதும் நாளை (நவ.8 ) போராட்டம் நடத்த காங். திட்டமிட்டுள்ளது.
காங். செய்தி தொடர்பாளர் மனிஷ் திவாரி கூறியது, “கருப்பு பணம் ஒழிப்பு, பயங்கரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுத்தல், கள்ள நோட்டுகளை அழித்தல் ஆகிய மூன்று நோக்கங்களுக்காக பண மதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், எந்த நோக்கமும் நிறைவேறவில்லை. முன்பை விட தற்போது அதிக அளவு பணம் புழக்கத்தில் உள்ளது” என்றார்.