வாஷிங்டன்: ஈரானின் சபகார் துறைமுகத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள இந்தியாவிற்கு அனுமதி வழங்குவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
சலுகை
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. அந்த நாட்டிடம் எந்த நாடுகளும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது. நவ.,4ம் தேதிக்கு பிறகு ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் மிரட்டல் விடுத்தது. இருப்பினும், இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்க முடிவு செய்தது. இந்நிலையில், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, இந்த தடையில் இருந்து விலக்கு அளித்து அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, ஈரான் வங்கி, எரிசக்தி துறை மற்றும் ஐரோப்பா, ஆசியாவில் உள்ள அந்நாட்டு நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா கடுமையான தடை விதித்துள்ளது.
அங்கீகாரம்
இந்நிலையில், ஈரானில் சபஹார் துறைமுகத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும், ஆப்கனை இணைக்கும் ரயில்பாதை அமைக்கவும், இந்தியாவிற்கு சில அனுமதியை அமெரிக்கா வழங்கியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், நீண்ட ஆலோசனைக்கு பிறகு, சபகார் துறைமுகத்தின் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும், இங்கிருந்து ஆப்கனுக்கு பொருட்களை கொண்டு செல்வதற்காக ரயில் பாதை அமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும், அமெரிக்கா சில அனுமதியை வழங்கி உள்ளது. ஈரானிலிருந்து பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்யவும் அனுமதித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த அனுமதியானது, ஆப்கனின் வளர்ச்சிக்கு முக்கியமான சபஹார் துறைமுகத்தின் வளர்ச்சியில், இந்தியாவின் பங்கை, அமெரிக்கா அங்கீகரித்துள்ளதாக சர்வதேச நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.