Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி: ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ள அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, அதற்கான தொகையை ரூபாயாக செலுத்துவது தொடர்பாக இந்தியாவும், ஈரானும் ஆலோசனை நடத்தி வருகின்றன.

 

தடை நீக்கம்

ஈரான் மீது, பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதையடுத்து, ‘ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துவரும் நாடுகள், நவ., 4க்குள், அதை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, அமெரிக்கா எச்சரித்தது. எனினும், ஈரானிடம் இருந்து தொடர்ந்து, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய, இந்தியா முடிவு செய்தது. இந்நிலையில், அமெரிக்காவின் நட்பு நாடுகளான, இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட எட்டு நாடுகள், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்ய, அமெரிக்கா சம்மதித்துள்ளது.

ஆலோசனை தீவிரம்இந்நிலையில், எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை, இந்தியாவில் உள்ள வங்கி மூலம், ரூபாயாக செலுத்துவது குறித்து இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈரானுடன் மத்திய அரசு நடத்தி வருகிறது. எந்த வங்கியில் செலுத்துவது என்பது குறித்து இரு நாடுகளும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. முன்னர், யூகோ வங்கி மூலம் பணம் செலுத்தவும், 45 சதவீதம் இந்திய ரூபாயாகவும், மற்ற 55 சதவீதத்தை யூரோவாகவும் செலுத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது, கச்சா எண்ணெய்க்கான மொத்த பணத்தையும் இந்திய ரூபாயாக பெற்று கொள்ள ஈரான் சம்மதித்து உள்ளது. இந்த பணத்தை , இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு திருப்பி செலுத்த ஈரான் முடிவு செய்துள்ளது. இந்திய வங்கிகளில் பணம் செலுத்துவதன் மூலம், ஈரான் வங்கிகளுக்கும் தடை விதிக்கப்பட்டாலும், தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்ய முடியும் என மத்திய அரசு கருதுகிறது.


Share this page