புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நியமன விவகாரத்தில், மத்திய அரசு, வரலாற்றில் இல்லாத வேகத்தில் செயல்பட்டது தமக்கு வியப்பை ஏற்படுத்தியதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறியுள்ளார்.
நீதிபதிகள் பதவியேற்பு
கடந்த செவ்வாய்க்கிழமை(அக்., 30)நீதிபதிகள், ஹேமந்த் குப்தா, சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா மற்றும் அஜய் ரஸ்தோகிஆகியோர்,சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்க, மத்திய அரசிடம், கொலீஜியம், பரிந்துரை செய்தது. இதற்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று முன்தினம் (நவ.,1) ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, நான்கு பேரும், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நேற்று (நவ.,2) பதவியேற்றனர். இவர்களுக்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம், நீதிபதிகளின் எண்ணிக்கை, 28 ஆக உயர்ந்துள்ளது.
48 மணி நேரத்தில்
இது தொடர்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறுகையில், வரலாற்றில் இல்லாத வேகத்தில், அதுவும் 48 மணி நேரத்திற்குள், கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு அறிவிப்பு வெளியிட்டது, தமக்கு பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.