புதுடில்லி: ‘வங்கிகளின் வராக்கடன் குறித்து, பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிய விபரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தர இயலாது’ என, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னராக, 2013 – 2016 செப்டம்பர் வரை, ரகுராம் ராஜன் பதவி வகித்தார். இவர், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறிதாவது:ரிசர்வ் வங்கி கவர்னராக நான் பதவி வகித்தபோது, வங்கி மோசடிகள் குறித்து, முன்னதாகவே அறிந்து, அரசுக்கு தகவல் தரும் நோக்கத்தில், ஒரு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு, பல பெரிய மோசடிகளை கண்டறிந்து, அது குறித்து, பிரதமர் அலுவலகத்திடம் விபரங்களை சமர்ப்பித்தது. அதுபற்றி, அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து, எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால், இந்த விவகாரம், உடனடியாக கவனிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, ‘பிரதமர் அலுவலகத்துக்கு, ரகுராம் ராஜன் அளித்த விபரங்கள் மற்றும் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து தகவல்களை அளிக்க வேண்டும்’ என, பிரபல இணைய பத்திரிகையின் சார்பில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது.’இது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராது என்பதால், அது குறித்த தகவல்களை தர முடியாது’ என, பிரதமர் அலுவலக செயலர், பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.