புதுடில்லி:என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்பு படையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான கமாண்டர் பதவி, ஆறு மாதங்களாக காலியாக உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், என்.எஸ்.ஜி., உள்ளது. இதில் அங்கம் வகிக்கும் கறுப்புப் பூனை படை, நாட்டின், வி.வி.ஐ.பி.,க்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது. தவிர, பயங்கரவாத தடுப்பு, கடத்தல் தடுப்பு உட்பட பல பிரிவுகள் இதில் உள்ளன.என்.எஸ்.ஜி.,யில், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை திட்டமிடுதல், நிறைவேற்றுதல் உள்ளிட்ட பொறுப்புகளை நிர்வகிக்கும், ராணுவ நடவடிக்கைகளுக்கான கமாண்டர் பதவியில் இருந்த, மேஜர் ஜெனரல் சஷாங்க் மிஸ்ரா, ஏப்ரலில் பதவி உயர்வு பெற்றார்.
அதன்பின், ஆறு மாதங்களாக இப்பதவியில் யாரும் நியமிக்கப்படாமல் காலியாக உள்ளது. இதன் தற்காலிக கமாண்டராக, ராணுவத்தில், மேஜர் ஜெனரல் அந்தஸ்தில் உள்ள ஒருவர் உள்ளார்.இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, என்.எஸ்.ஜி., சமீபத்தில் கடிதம் எழுதி உள்ளது. அதில், ராணுவ நடவடிக்கைகளுக்கான கமாண்டரை நியமிக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
ராணுவத்தில் உள்ளோரில், என்.எஸ்.ஜி., கமாண்டர் பதவிக்கு தகுதியான அதிகாரிகள் இல்லாததால், இந்த பதவி காலியாக இருப்பதாக, தகவல்கள் கூறுகின்றன.