புதுடில்லி: “ஜம்மு – காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு, அம்மாநில மக்கள், அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்; பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில், பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக செயல்படக் கூடாது,” என, மத்திய நிதி அமைச்சர், அருண் ஜெட்லி வலியுறுத்தினார்.
டில்லியில் நேற்று நடந்த, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு சொற்பொழிவில், மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி பேசியதாவது: பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, பஞ்சாப், வடகிழக்கு, தென் மாநிலங்களில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். ஆனாலும், இந்த சவால் முழுமை அடையவில்லை. நாட்டின் சில பகுதிகளில், நக்சல்கள் பாதிப்பு உள்ளது. அதை முறியடிக்க வேண்டும். ஜம்மு – காஷ்மீரில், அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலை நடத்துகிறது. பிரிவினைவாதிகள் மூலம், மாநிலத்தில் குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது. நமது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான இந்தப் போரில், நாம் அனைவரும் ஒருமித்து செயல்பட வேண்டும். அரசியல் கட்சிகள் ஆதரவுடன், ஜம்மு – காஷ்மீர் மக்களின் முழு ஆதரவும் தேவை. ஜம்மு – காஷ்மீர், நமது நாட்டின் ஒரு பகுதி என்பதை உணர்ந்து, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு தராமல், அம்மாநில மக்கள், அரசுக்கு முழு ஆதரவை தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.