சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என ஐகோர்ட் 3வது நீதிபதி சத்யநாராயணா தீர்ப்பு வழங்கினார்.
3வது நீதிபதி
முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, 2017 செப்டம்பரில், கட்சி தாவல் சட்டத்தின் கீழ், 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
தகுதி நீக்கத்தை எதிர்த்து, 18 பேரும், சென்னை ஐகோர்ட்டில், மனுக்கள் தாக்கல் செய்தனர். 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் வழக்கில் சபாநாயகர் உத்தரவு செல்லும் என தலைமை நீதிபதியும், செல்லாது என நீதிபதி சுந்தரும் தங்களின் தீர்ப்பில் கூறி இருந்தனர். நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் இந்த வழக்கில் புதிர் எழுந்தது.
இந்த வழக்கு 3வதாக ஒரு நீதிபதி விசாரித்து தீர்ப்பு வழங்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது.அதன்படி மூன்றாவது நீதிபதி சத்ய நாராயணன் 12 நாட்களாக வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கினார்.


இடைத்தேர்தல் நடத்தலாம்
நீதிபதி தனது தீர்ப்பில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும். சபாநாயகர் முடிவில் தவறு இல்லை. தகுதி நீக்கம் சட்ட விரோதம் இல்லை. சபாநாயகர் உரிய கால அவகாசம் கொடுத்து, சரியான நடைமுறையை பின்பற்றி தகுதி நீக்கம் செய்து உள்ளார். அரசு கொறடா பிறப்பித்த உத்தரவின் அடிப்படையை ஆராய்ந்து பார்த்தே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
முதல்வர் பழனிசாமியின் சாட்சியத்தையும் ஆராய்ந்து பார்த்து தான் தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது. சட்டசபையில் பெரும்பான்மை வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என்ற தடை நீக்கம் செய்யப்படுகிறது. இரு தரப்பு வாதங்களின் அடிப்படையில் தன்னிச்சையாக தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. நீதிபதி இந்திரா பானர்ஜியின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்தலாம். இவ்வாறு நீதிபதி சத்யநாராயணா தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.