திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்கு சென்ற பக்தர்களை அரசோ, போலீசாரோ தடுக்கவில்லை. அங்கு நடந்த வன்முறைக்கு ஆர்.எஸ்.எஸ்., தான் காரணம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
வெள்ள நிவாரண நிதி திரட்ட வளைகுடா நாடுகளுக்கு சென்று இருந்த முதல்வர் பினராயி விஜயன் கேரளா திரும்பியுள்ளார். இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
போர்க்களமாக்க முயற்சியா ?
சபரிமலை விவகாரத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை கேரள மாநில அரசு நடைமுறைப்படுத்தும் என்றே சுப்ரீம் கோர்ட்டில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலுக்கு செல்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து இருந்தது. அங்கு சென்ற பக்தர்களை அரசோ, போலீசாரோ தடுக்கவில்லை.
சபரிமலை பகுதியை போர்க்களம் போல மாற்ற ஆர்.எஸ்.எஸ்., தான் முயற்சி செய்தது. போராட்டகாரர்கள் வாகனங்களை வழி மறித்தனர். பெண் பக்தர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை தாக்கினர். பத்திரிகையாளர்கள் மீது இதுபோன்ற அணுகுமுறை காட்டப்பட்டது கேரள சரித்திரத்தில் இதுவே முதல் முறை. இவ்வாறு அவர் கூறினார்.