பெங்களூரு: நடிகர் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரை மறுத்துள்ள அர்ஜுன், மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக கூறினார். தமிழ் மற்றும் கன்னட படங்களில் பிரபலமாக அறியப்பட்டவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன். இவர் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் ‘மி டூ’வில் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நானும், நடிகர் அர்ஜூனும் இணைந்து நடித்த கன்னட படம் விஷ்மயா (தமிழில் நிபுணன்). இதில் இருவரும் கணவன் -மனைவியாக நடித்தோம். அப்போது நெருக்கமான காட்சிகளுக்காக ஒத்திகை பார்க்கப்பட்டது. அதில் என்னை கட்டி அணைத்த அர்ஜூன், பின்பக்கம் கைகளை பரவவிட்டார். திடீரென்று நடந்த இந்த சம்பவத்தால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன். பிறகு படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் அனுமதியின்றி தொட்டு பேசுவது, தவறான கண்ணோட்டத்தில் பார்த்தது மட்டுமின்றி தனியாக ரிசார்ட்டில் சந்திக்கலாம் என்று அழைப்பு விடுத்தார்.
இதுகுறித்து இயக்குனரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பதிவிட்டுள்ளார். நடிகை ஸ்ருதி ஹரிஹரன் குற்றச்சாட்டை மறுத்துள்ள நடிகர் அர்ஜூன் கூறியதாவது: நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தவறான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இதனால் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் பதில் சொல்ல முடியாமல் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளேன். சினிமா துறையில் என்னுடன் குறைந்தபட்சம் 60க்கும் மேற்பட்ட நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர். தற்போதும் தொடர்ந்து சிலர் நடித்து வருகின்றனர். அவர்கள் யாரும் இது போன்ற குற்றச்சாட்டுகள் தெரிவிக்கவில்லை. எனக்கும் திருமண வயதில் மகள்கள் இருக்கின்றனர். ஓராண்டுக்கு முன்பு வெளியான படத்தில் அதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருந்தால் அதை அப்போதே வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் தற்போது உள்நோக்கத்துடன் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன் என்றார்.
நடிகையின் குற்றச்சாட்டு குறித்து விஷ்மயா பட இயக்குனர் அருண் வைத்தியநாதன் விடுத்துள்ள அறிக்கை: அர்ஜூன், ஸ்ருதி ஹரிஹரன் இருவரும் தங்கள் தொழிலில் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள். படத்தில் நெருக்கமான காட்சிகள் வசனங்களை பார்த்த அர்ஜூன், எனக்கு திருமண வயதில் மகள் இருக்கிறாள், இது போன்ற காட்சிகளில் நடிக்க முடியாது மாற்றுங்கள் என்று சொன்னார். நாங்களும் காட்சியையும், வசனத்தையும் மாற்றினோம். இருவருமே எனக்கு நல்ல நண்பர்கள். நடிகை ஸ்ருதியின் குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார்.