புதுடில்லி : ‘கேரள மாநிலத்தில் நடந்த கலப்பு திருமணத்தில், காதல் மட்டுமே உள்ளது. அதில், ‘லவ் ஜிஹாத்’ இல்லை’ என, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்தவர், அசோகன்; ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மகள், அகிலா, 25. இவர், மதம் மாறி, ஹாதியா என, பெயரை மாற்றி, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த, ஷபின் ஜஹான் என்பவரை திருமணம் செய்தார். ஹாதியாவின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது தந்தை அசோகன், கேரள மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஹாதியா திருமணத்தை, ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி, ரத்து செய்து, தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், ஹாதியா, மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், கேரள மாநில உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, ஹாதியா – ஷபீன் ஜஹான் ஆகியோர் சேர்ந்து வாழ, அனுமதி அளித்தது. இதையடுத்து, ஷபீன் ஜஹான் மீது, என்.ஐ.ஏ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரி ஒருவர் கூறியதாவது: கேரள மாநிலத்தில் நடந்த கலப்பு திருமணத்தில், காதல் மட்டுமே உள்ளது. இதில், ‘லவ் ஜிஹாத்’ இல்லை. ஹாதியா விவகாரம் போன்ற பல வழக்குகளை விசாரித்ததில், காதல் மட்டுமே இருப்பது தெரிய வந்தது. இதில், எந்தவொரு குற்றமும் காணப்படவில்லை. இருவரது சம்மதத்தின்படியே திருமணம் நடக்கிறது. இதில், எந்த தவறும் கிடையாது. இந்த ஜனநாயக நாட்டில், யார் யாரை வேண்டுமானாலும் காதல் செய்யலாம். அனைவருக்கும் சமமான உரிமை உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில், என்.ஐ.ஏ., எந்த அறிக்கையும் தாக்கல் செய்யாது என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.