Select Page

City Union Bank



Share this page

திருவனந்தபுரம்:

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே செல்ல அனுமதி இருந்தது. இந்த முறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அக்டோபர் 28-ம் தேதி 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் நுழையலாம் என்ற தீர்ப்பை அளித்தது. இந்த தீர்ப்பு பலதரப்பிலும் வரவேற்பை பெற்றபோதும், சில இந்து அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் இதற்கு எதிராக குரல் கொடுத்தன.

இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கேரள மாநில அரசு முறையீடு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அந்த கோரிக்கையை நிராகரித்த முதல்மந்திரி பினராயி விஜயன், சபரிமலை கோவிலில் பெண்களுக்கான வசதிகள் செய்துகொடுக்க உத்தரவிட்டார். அதேபோல், சபரிமலை கோவிலை பராமரித்துவரும் தேவசம்போர்டும் தீர்ப்பை எதிர்க்க மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கேரளாவின் செல்வாக்கு பெற்ற நாயர் சேவை சமூகம் சார்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்ய மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய நாயர் சேவை சமூகத்தின் பொதுச்செயலாளர் சுகுமாரன் நாயர், தீர்ப்பை எதிர்த்து தேவசம்போர்டு மறுஆய்வு மனு அளிக்காது இருப்பது விரக்தி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Share this page