Select Page

City Union Bank



Share this page

டெல்லி: மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானுக்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளது அவரது மகள் வடிவில். லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதாதளம் சார்பில் 2019 லோக்சபா தேர்தலில் பாஸ்வானுக்கு எதிராக அவரது மகள் ஆஷா பாஸ்வான் நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஆஷா பாஸ்வானுக்கு லாலு கட்சி சீட் கொடுத்தால் நிச்சயம் அவரை பாஸ்வானுக்கு எதிராக களம் இறக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் பாஸ்வான் தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளார். பாஸ்வானின் முதல் மனைவிக்குப் பிறந்தவர்தான் ஆஷா.

இதுகுறித்து ஆஷாவின் கணவர் அனில் சாது கூறுகையில், பாஸ்வானுக்கு கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு நிலவுகிறது. அவர் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்.பாஸ்வான் தனது மகன் சிராக் பாஸ்வானுக்கு ஆதரவாகவே இருக்கிறார். அவருக்குத்தான் கடந்த லோக்சபா தேர்தலில் சீட் கொடுத்தார். கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும் ஆக்கினார். இதை கட்சியினர் விரும்பவில்லை.

மேலும் தனது முதல் திருமணம் மூலம் பிறந்த மகள்களை அவர் புறக்கணித்து வருகிறார். அவர்களை மதிப்பதில்லை, கண்டு கொள்வதில்லை. வரும் லோக்சபா தேர்தலில் பாஸ்வானையும், அவரது மகனையும் எதிர்த்துப் போட்டியிட நானும் எனது மனைவியும் தயாராகவே உள்ளோம். லாலு பிரசாத் யாதவும், தேஜஸ்வி யாதவும் (லாலு மகன்) சீட் கொடுத்தால் நிச்சயம் போட்டியிடுவோம் என்றார் சாது.

பாஸ்வான் தற்போது ஹாஜிப்பூர் தொகுதி எம்பியாக உள்ளார். அவரது மகன் சிராக் பாஸ்வான் சமுய் தொகுதி உறுப்பினர் ஆவார். பாஸ்வானின் தம்பி ராமச்சந்திர பாஸ்வான் சமஷ்டிபூர் தொகுதி எம்.பியாக இருக்கிறார். பாஸ்வானின் இன்னொரு தம்பியான பசுபதி குமார் பரஸ், நிதிஷ் குமார் அமைச்சரவையில் அமைச்சராக இருக்கிறார்.

பாஸ்வானுக்கு மொத்தம் 2 மனைவிகள். முதல் மனைவிக்கு 2 மகள்கள். அதில் 2வது மகள்தான் ஆஷா.


Share this page