கிரயோஜெனிக் ராக்கெட் இன்ஜின் ரகசியங்களை விற்றதாக இஸ்ரோ விஞ்ஞானி நம்பிராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் பின்னர் விடுவிக்கப்பட்ட நம்பி நாராயணன் மானநஷ்டஈடு வழக்கு தொடர்ந்தார். வழக்கில் உச்ச நீதிமன்றம் விஞ்ஞானி நம்பி நாராயணணுக்கு ரூ.50 லட்ச இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
1994-ம் ஆண்டு மாலத்தீவைச் சேர்ந்த மரியம் ரஷீதா என்ற பெண்ணை கேரளா போலீஸ் திருவனந்தபுரத்தில் கைது செய்து, அவரிடத்தில் இருந்து இஸ்ரோ தயாரிக்கும் ராக்கெட் இன்ஜின்களின் வரைபடங்களைக் கைப்பற்றியது. தொடர்ந்து பாகிஸ்தானுக்கு கிரயோஜெனிக் இன்ஜின் ரகசியங்களை விற்றதாக கிரயோஜெனிக் இன்ஜின் வடிவமைப்பு திட்டத்தின் தலைவராக இருந்த விஞ்ஞானி நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டார்.
இணை இயக்குநர் சசிக்குமரன், ரஷ்ய விண்வெளி அமைப்பின் இந்திய ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், தொழிலதிபர் எஸ்.கே.சர்மா, மரியம் ரஷீதாவின் தோழி மாலத்தீவைச் சேர்ந்த ஃபாசூயா ஹஸன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சி.பி.ஐ இந்த வழக்கை விசாரித்தது. 1996-ம் ஆண்டு கேரள போலீஸின் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு என்று உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ அறிக்கை அளித்தது. சி.பி.ஐ அறிக்கையைத் தொடர்ந்து நம்பி நாராயணன் உள்ளிட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுவித்தது.
இந்த வழக்கில் நம்பி நாராயணன் 50 நாள்கள் வரை சிறையில் இருந்தார். ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கு குறித்து ‘Orbit of memories’ என்கிற தன் சுயசரிதைப் புத்தகத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணன், “இந்தியா கிரயோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெறுவது அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லை. விண்வெளிஆராய்ச்சியில் இந்தியா முன்னேற்றம் காண்பதற்குத் தடை ஏற்படுத்த முனைப்புக் காட்டியது. இதனால், சி.ஐ.ஏ-வை ஏவிவிட்டது. அடுத்தவர்களை அழிப்பதில் வல்லமை படைத்த சி.ஐ.ஏ தனக்கு மசிந்த இந்திய போலீஸ் அதிகாரிகளைக் கொண்டு பொய்யான குற்றச்சாட்டுகளை ஜோடித்து என்னைக் கைது செய்ய வைத்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
1992-ம் ஆண்டு கிரயோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பம் பெறுவது தொடர்பாக இந்தியாவும், ரஷ்யாவும் கையொப்பமிட்டன. அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் இந்தியாவுக்கு கிரயோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தை தரக்கூடாது என்று ரஷ்யாவுக்கு நிர்பந்தித்தன. நெருக்கடி காரணமாக ரஷ்யா ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
புதிய ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. அதன்படி, கிரயோஜெனிக் இன்ஜின்களின் 4 மாதிரிகள் மட்டுமே இந்தியாவுக்கு தந்தது. தொழில்நுட்பம் தரப்படவில்லை. கிரயோஜெனிக் இன்ஜினுக்கான திரவ எரிபொருள் கண்டுபிடிப்பதுதான் சவால் நிறைந்தது. இந்தப் பணிக்குத்தான் விஞ்ஞானி நம்பி நாராயணன் பொறுப்பேற்று இருந்தார். இதே தொழில்நுட்பத்தை பாகிஸ்தானுக்கு வழங்கினார் என்பதுதான் நம்பி நாராயணன் மீது ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு. தன் அறிவியல் கண்டுபிடிப்பின் உச்சகட்டத்தில் இருந்த காலத்தில் சி.ஐ.ஏ-வின் குள்ளநரித்தனத்துக்கு பலிக்கடா ஆகிப் போனார் நம்பி நாராயணன். இந்தியாவும் திறமைமிக்க விஞ்ஞானியைப் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போனது. – [Junior Vikatan ]