ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
அண்மையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, சிறையிலிருக்கும், 7 பேரை விடுவிப்பது தொடர்பாக, ஆளுநருக்கு பரிந்துரைக்க, தமிழக அரசுக்கு அதிகாரமுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்பின் எதிரொலியாகத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 7 பேரை விடுதலை செய்வது குறித்து ஆளுநர் விரைவில் முடிவெடுப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை, ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சரவையின் கருத்துக்கேற்ப, ஆளுநரின் முடிவு அமையும் எனக் கூறப்படுகிறது.