வட கொரியாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில், ஏவுகணைகள் இடம்பெறாததற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வட கொரியாவில், கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்ததன் 70-வது ஆண்டு விழா கொண்டாட்டம் நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி, அந்த நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் முன்னிலையில் ராணுவ அணிவகுப்பு மிகப் பெரிய அளவில் நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த அணிவகுப்பில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையும் இடம்பெறும். முன்னதாக, அணு ஆயுதங்களை அழிப்பதாக கிம், ட்ரம்ப்பிடம் தெரிவித்திருந்தார்.
எனவே, இந்த ஆண்டு நடைபெற்ற வடகொரியாவின் ராணுவ அணிவகுப்பு, உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. அந்த அணி வகுப்பின்போது, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இடம்பெறவில்லை. பிற ஆயுதங்கள் மட்டுமே இருந்தன. ஏவுகணைகள் இல்லாத வட கொரியாவின் ராணுவ அணிவகுப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘வடகொரியா, அந்த நாட்டின் 70-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ராணுவ அணிவகுப்பை அணு ஆயு ஏவுகணைகள் இல்லாமல் நடத்தியுள்ளது. அது, அமைதியையும் பொருளாதார வளர்ச்சியையும் முன்னிருத்துவதாக இருந்தது. இது, வடகொரியாவிடமிருந்து வெளிப்படும் நேர்மறையான மற்றும் மிகப் பெரிய விஷயம். நன்றி கிம் ஜாங். நம் இருவருக்கும் மத்தியில் மோதல் ஏற்படும் என்று நினைத்த அனைவரின் எண்ணமும் தவறு என்று நாம் இருவரும் இணைந்து நிரூபிப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.