தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த மாதம் 7-ம் தேதி காலமானார். சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு, மாநில, தேசிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், மெரினாவில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் இறுதிச்சடங்களில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிகலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகத் தமிழகம் வந்த பிரணாப் முகர்ஜி, சென்னை கோபாலபுரத்தில் உள்ள மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் இல்லத்துக்குச் சென்றார். அவருடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனும் உடனிருந்தார். கோபாலபுர இல்லத்துக்கு வந்த அவரை, ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி ஆகியோர் வரவேற்றனர் பின்னர், கோபாலபுர இல்லத்திலிருந்து வெளியே வந்த அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “கருணாநிதி மறைவின்போது என்னால் வர இயலவில்லை. அதனால், கோபாலபுரம் இல்லம் வந்து மரியாதை செலுத்தினேன். ஒரு சிறந்த மாபெரும் தலைவரை நாடு இழந்துவிட்டது. கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியைப் பலமுறை சந்தித்துள்ளேன். அவர் இறந்த பிறகு தற்போதுதான் வந்துள்ளேன். அந்த மாபெரும் தலைவருக்கும் எனக்கும் சுமார் 48 ஆண்டுக்கால நல்லுறவு இருக்கிறது. அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினேன்” என்று தெரிவித்தார்.