கர்நாடகாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் 982 இடங்களில் வெற்றி பெற்று முதலிடத்திலும், 929 இடங்களைப் பெற்று பா.ஜ.க இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன.
கர்நாடகாவில் ஆகஸ்ட் 31-ம் தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் நடைபெற்றது. 105 நகர உள்ளாட்சி அமைப்புகள், மைசூரு, துமகூரு, சிவமோகா ஆகிய 3 மாநகராட்சிகளில் இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 67.51 சதவிகித ஓட்டுகள் பதிவாகின. 30 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
எல்லாவற்றையும் சேர்த்து மொத்தம் 2,709 இடங்களுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டன. காங்கிரஸும் ஜனதா தளமும் கூட்டணி ஆட்சியில் உள்ள நிலையிலும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்தனியாகவே போட்டியிட்டன. தற்போதுவரை அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் முடிவில் காங்கிரஸ் 982 இடங்களையும், பா.ஜ.க 929 இடங்களையும், மதசார்பற்ற ஜனதா தளம் 307 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. நகர்ப்புறங்களில் அதிக இடங்களில் பா.ஜ.க-வும், கிராமப்புறங்களில் காங்கிரஸும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
இதுகுறித்து தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, ‘காங்கிரஸ் – ம.ஜ.த கூட்டணியின் வளர்ச்சி அரசியல் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். பா.ஜ.க-வின் பொய் பிரசாரத்தை நிராகரித்துவிட்டனர்’ என்றார்.
இதுகுறித்து தெரிவித்த ஜனதாதள கட்சியின் தேசியத் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா, ‘நாங்கள் வெற்றிபெற்றுள்ளோம். காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து நீண்ட தூரம் செல்லும்’ என்றார்.