ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் மீதான துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது மட்டுமல்லாது மக்கள் மீது காவல்நிலைய சித்ரவதை உட்பட மனித மீறல்களில் ஈடுபட்ட காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்று தூத்துக்குடி மாவட்ட சி.பி.எம் செயலாளர் அர்ச்சுணன் சி.பி.ஐக்கு கடந்த மே மாதம் புகார் அனுப்பினார். வழக்கு பதிவு செய்யப்படாததால், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழக அரசின் செயல்களைக் கண்டித்ததுடன் ஏற்கெனவே பெறப்பட்ட புகாரின் மீது உரிய வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்றும், துப்பாக்கிச் சூடு, போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருந்த அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ, சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்றும் உத்தரவிட்டது. இது ஸ்டெர்லைட் போராட்டத்துக்குக் கிடைத்த முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், “தான் முன்பு கொடுத்த புகாரை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணைக்கு எடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்திட வேண்டும்” என்று தூத்துக்குடி மாவட்ட சி.பி.எம் செயலாளர் அர்ச்சுணன், சென்னையிலுள்ள சி.பி.ஐ இணை இயக்குநர் அலுவலகத்தில் இன்று நீதிமன்ற உத்தரவை சமர்ப்பித்தார். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சி.பி.ஐ இணை இயக்குநர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஷாஜிசெல்லன், சுப்பு, முத்துராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.