திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், சமீபத்தில் Ph.D ஆய்வுப் படிப்பை முடித்து முனைவர் பட்டம் பெற்றார் திருமாவளவன். `மீனாட்சிபுரம் மதமாற்றங்கள் ஓர் ஆய்வு’ என்ற தலைப்பின் கீழ் அவர் ஆய்வறிக்கையைச் சமர்பித்தார். இந்நிலையில், அவரது ஆய்வறிக்கை தொடர்பாக, புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
இதுதொடர்பாகத் திருநெல்வேலியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கிருஷ்ணசாமி, பல்கலைக்கழகத்தில் திருமாவளவன் சமர்பித்த, திருநெல்வேலி மீனாட்சிபுரம் மதமாற்ற நிகழ்வு தொடர்பான, முனைவர் பட்ட ஆய்வு அறிக்கை, முற்றிலும் தவறானது என்று குற்றம்சாட்டினார். மேலும், திருமாவளவன் வெளிநாட்டு நிதியுதவி மற்றும் சதியுடன், இந்த ஆய்வை மேற்கொண்டதாகவும், 2002-ம் ஆண்டு முனைவர் பட்டத்துக்கு பதிவு செய்து, 16 ஆண்டுகள் கழித்து, தற்போது ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார். அந்த ஆய்வறிக்கையானது, இது தேவேந்திர குல வேளாளர் மக்களின், பட்டியல் வெளியேற்றக் கோரிக்கைக்கு எதிரானது என்றும் கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்துள்ளார். இந்தப் பட்டம் அளித்த மனோன்மணியம் சுந்தரனார் துணைவேந்தர், பேராசிரியர்களுக்கு எதிராக விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.