நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், இரங்கல் தெரிவிக்கப்பட்ட வரலாறு கருணாநிதிக்கு உள்ளது என புகழ் அஞ்சலிக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசியுள்ளார்.
வயது மூப்பின் காரணமாக முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார். இவரது மறைவையொட்டி, மதுரை, கோவை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நினைவேந்தல் கூட்டம் நடந்தது. பத்திரிகையாளர்கள், திரைப்பிரபலங்கள், கவிஞர்கள் என அனைவரும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிலையில், சென்னையிலும் நினைவேந்தல் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது. அதன்படி, `தெற்கில் உதிக்கும் சூரியன்’ என்ற தலைப்பில், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புகழ் அஞ்சலிக் கூட்டம் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில், தி.மு.க தலைவர் ஸ்டாலின், முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். பா.ஜ.க சார்பில் அமித் ஷாவுக்கு அழைப்பு விடுத்த நிலையில் அவருக்குப் பதிலாக மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்காரி மற்றும் அக்கட்சியின் தேசிய செயலாளர் முரளிதரராவ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
விழாவில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், இரங்கல் தெரிவிக்கப்பட்ட வரலாறு கருணாநிதிக்கு உள்ளது. எமர்ஜென்சி காலத்தில் தி.மு.க-வின் பங்கு அளப்பரியது.நெருக்கடி நிலையை பா.ஜ.க.வும், கருணாநிதியும் தான் முதலில் எதிர்த்தோம் எனக் கூறினார்.