Select Page

City Union BankShare this page

நாம் ஒன்றும் பி.ஜே.பி-யின் அடிமை இல்லை’ என்ற ஒற்றை முழக்கம் ஓங்கி ஒலித்துள்ளது அ.தி.மு.க செயற்குழுவில். ஜெ. மரணத்துக்குப் பிறகு முதல்முறையாக  பி.ஜே.பி-மீது அ.தி.மு.க தலைமை வைத்திருக்கும் இந்த விமர்சனம், தமிழக அரசியல் கணக்கையே மாற்றிப்போடும் நிலையை உண்டாக்கியுள்ளது.

அ.தி.மு.க-வின் செயற்குழுக் கூட்டம், ஆகஸ்ட் 23-ம் தேதி நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, பி.ஜே.பி அரசின் மனம் கோணாமல் செயல்பட்டு வந்த அ.தி.மு.க தலைமையின் மனமாற்றம், வரவேற்புரை ஆற்றிய தம்பிதுரையின் பேச்சிலேயே தெரிய ஆரம்பித்தது. ‘‘தேசியக் கட்சிகள் நம்மை அண்டியே இருக்கவேண்டிய கட்டாயத்தை அம்மா உருவாக்கி வைத்திருந்தார். அந்த நிலையை வரும் காலத்திலும் நாம் ஏற்படுத்த வேண்டும்’’ என்று பி.ஜே.பி-க்கு செக் வைக்கும் விதத்தில் சொன்னார் தம்பிதுரை.

அவரைத் தொடர்ந்து பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ‘‘மத்தியில் ஆளும் பி.ஜே.பி-க்கு நாம் பணிந்துபோவது போன்ற நிலை இப்போது இருக்கிறது. ஆட்சி நன்றாகப் போவது போல, கட்சியும் பலமாக இருக்க வேண்டும். அதற்கு, மத்திய அரசுக்கு நாம் அடிமை இல்லை என்பதைத் தொண்டர்களுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்’’ என்று உணர்ச்சிகரமாகப் பேசியுள்ளார்.

இன்னொரு துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி, ‘‘பி.ஜே.பி அரசு நம்மை அடக்கி ஆள நினைக்கிறது. அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. அம்மா உடல்நலமில்லாமல் இருந்தபோது, ஸ்டாலின் உட்படச் சிலர் வந்து பார்த்தார்கள். கருணாநிதி உடல் நலிவுற்றபோது, முதல்வரும் துணை முதல்வரும் சென்று பார்த்துவிட்டார்கள். அதன்பிறகு எதற்கு அத்தனை அமைச்சர்கள் போகிறீர்கள்? தொண்டர்கள் இதை ரசிக்கவில்லை. நாம் பெரிய கட்சி என்ற எண்ணம் நமக்கு முதலில் இருக்க வேண்டும். அம்மா காட்டிய வழியில் நாம் தனியாகப் பயணித்தால்தான் நம்மைத் தேடி அவர்கள் வருவார்கள்’’ என்று அதிரடியாகப் பேசியுள்ளார். அப்போது,  ‘பி.ஜே.பி-யிடம் முதலில் போய் காலில் விழுந்தது யார்?’ என்ற குரல்கள் கூட்டத்தின் பின்வரிசையிலிருந்து மெதுவாக எழ ஆரம்பித்தன.

அதன்பிறகுப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘‘நாம் யாருக்கும் அடிமை இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். அம்மா மறைவுக்குப் பிறகு ஆட்சிக்குச் சிக்கல் வந்த நிலையில், அண்ணன் பன்னீர்செல்வத்தை இரவோடு இரவாக முதல்வர் பதவியேற்க வைத்து ஆட்சியைக் காப்பாற்ற உதவியது மத்திய அரசு. அது ஒன்றே அவர்கள் நமக்குச் செய்த உதவி. கொள்கை அளவில் மத்திய அரசுடன் நாம் எதிர்நிலையில்தான் இருக்கிறோம். முத்தலாக் சட்டத்திருத்த விவகாரத்தில், மத்திய அரசைக் கடுமையாக எதிர்த்து அன்வர்ராஜா பேசியதெல்லாம் அதன் காரணமாகத்தான். எதிர்க்க வேண்டிய விஷயங்களில் எதிர்ப்பைக் காட்டுவோம்’’ என்று விளக்கம் சொன்னார்.

ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், டெல்லியில் தனக்கு நேர்ந்த அவமானம் பற்றிக் கொந்தளிப்புடன் விவரித்துள்ளார். ‘‘அமைச்சர் நிர்மலா சீதாராமனை முறைப்படி அனுமதி வாங்கித்தான் சந்திக்கச் சென்றோம். என் தம்பிக்குச் செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்கவே சென்றேன். அதை வெளியில் சொன்னதில் தவறு ஒன்றும் இல்லை. அதை அமைச்சர் பெரிதாக எடுத்துக்கொண்டு என்னை அவமதித்துவிட்டார். ஒரு பெரிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற ரீதியில் என்னை அவர்கள் அணுகவில்லை. என்னையல்ல, நமது கட்சியையே அவர் அவமானப்படுத்தி விட்டார். அதற்கு நாம் பாடம் புகட்டியே ஆகவேண்டும்’’ என்று பேசியுள்ளார் பன்னீர்.

மேலும் அவர், ‘‘நான் மீண்டும் இணைந்தபோது ‘கட்சிப் பொறுப்பு மட்டும் போதும், ஆட்சியில் எந்தப் பதவியும் வேண்டாம்’ என்றேன். தங்கமணியும் வேலுமணியும்தான் துணை முதல்வர் பதவியை ஏற்கச்சொல்லி வலியுறுத்தினர். எனக்கும் முதல்வருக்கும் எந்தக் கருத்துவேற்றுமையும் இல்லை. நாம் கட்சியை வளர்க்கும் பணியைத் தீவிரப்படுத்தி, வரும் தேர்தலில் வெற்றிபெற வேண்டும். அதற்குக் கட்சியில் நான் உட்பட மூத்த நிர்வாகிகள் அமைச்சர் பதவியை விட்டு விலகிக் கட்சிப் பணியில் ஈடுபடக்கூட தயாராக இருக்க வேண்டும்’’ என்று அதிரடியாகச் சொல்ல, முன்வரிசையில் இருந்த சில அமைச்சர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பன்னீர்செல்வம் பேசி முடித்தவுடன் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மைக் முன்பு வந்து, ‘‘நான் சில கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்’’ என ஆரம்பித்துள்ளார். ஆனால், அவர் பேச ஆரம்பித்தால் தேவையில்லாத சர்ச்சைகள் வெடிக்கும் என வைத்திலிங்கம் தலையிட்டு அவரை அமரச் செய்துள்ளார். கூட்டம் முடிந்தபிறகு கீழ்தளத்தில் தோப்பு வெங்கடாசலத்தை எடப்பாடியும் பன்னீரும் சந்தித்துப் பேசியுள்ளார்கள். ‘‘நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி நிறைய உள்ளது. அதைச் சரிசெய்யுங்கள். பல இடங்களில் செயல்பாடுகள் சரியில்லை. அதனால், தினகரன் தரப்புக்கு செல்வாக்கு கூடியுள்ளது’’ என தோப்பு வெங்கடாசலம் புகார் செய்துள்ளார். அதைக் கேட்டுக்கொண்ட எடப்பாடியும் பன்னீரும், மீண்டும் அவருடன் பேசுவதாக உறுதி கொடுத்தனர்.

‘பி.ஜே.பி-யின் பினாமி ஆட்சி’ என்ற பிம்பத்தை உடைக்கும் வேலையை ஆரம்பித்துள்ளார்கள் அ.தி.மு.க-வினர். இதன் விளைவு என்ன என்பது போகப் போகத் தெரியும்.


Share this page