Select Page

City Union BankShare this page

பெங்களூரில் நல்ல குளிர்’’ என்றபடி உள்ளே வந்தார் கழுகார்.

‘‘என்ன திடீர் பயணம்?’’ என்றோம். ‘‘காரணம் இருக்கிறது’’ என்றவர், ‘விரைவில் ரிலீஸ்’ என்ற தலைப்பை எழுதிக்கொடுத்து, ‘‘சசிகலாவை அட்டைப்படமாக வைத்து, இந்தத் தலைப்பை வையும்’’ என்றார்.

‘‘அப்படியானால் தண்டனைக் காலம் முடிவதற்குள்ளேயே சிறையிலிருந்து வெளியே வருகிறாரா சசிகலா?’’

‘‘ஆமாம். அதற்கான சூழல் கனிந்து வந்திருப்பதாக சசிகலா குடும்பத்தினரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும் உற்சாகத்துடன் சொல்கிறார்கள். ஆகஸ்ட் 18-ம் தேதி சசிகலாவின் பிறந்த நாள். அன்றைய தினத்தில் அ.ம.மு.க-வினர் ‘சிறையில் இருக்கும் சசிகலா சீக்கிரமே வெளியே வர வேண்டும்’ என்று தமிழகத்தின் முக்கியக் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்தனர். அதேபோல், பிறந்த நாளுக்கு சில தினங்களுக்கு முன்பு தினகரனின் மனைவி அனுராதா, தினகரனின் மைத்துனர் டாக்டர் வெங்கடேஷ் என அனைவரும் குடும்ப சகிதமாக தஞ்சாவூரில் உள்ள தஞ்சைபுரீஸ்வரர் கோயிலில் யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இது, குபேரன் வழிபட்ட கோயில். இழந்ததை மீட்கவும், ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு மீண்டும்  அது கிடைக்கவும் அருள்புரியும் சிறப்புமிக்க தலம். இங்கு பூஜை செய்த பிரசாதங்களை தினகரன் எடுத்துச்சென்று சசிகலாவிடம் கொடுத்தார். அப்போது தினகரனிடம், ‘எப்போதும் போல் நீ உன் வேலைகளைப் பார்த்துக்கொண்டிரு. சீக்கிரமே நமக்கு நல்ல சேதி கிடைக்கும்’ என்று கூறி அனுப்பினாராம் சசிகலா.’’

‘‘அந்த நல்ல செய்தி எப்படிக் கிடைக்குமாம்?’’

‘‘சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிறைக்குச் சென்றார் சசிகலா. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் முடிந்துவிட்டன. இதுதவிர, வழக்கு போடப்பட்ட 96-ம் ஆண்டில் சில காலம் அவர் சிறையில் இருந்தார். பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் குன்ஹா தண்டனையை அறிவித்தபோதும் சிறைக்குச் சென்றார். பொதுவாக தண்டனையில் இருக்கும் கைதிக்கு அரசு விடுமுறை, கைதிக்கான விடுமுறை 15 நாட்கள், பெரும் தலைவர்கள் பிறந்த நாள் என ஒரு வருடத்திற்கு சுமார் 40 முதல் 45 நாட்கள் வரை தண்டனைக் காலத்திலிருந்து குறைக்கப்படுவது வழக்கம். இதற்காகத்தான் கணவர் நடராசன் இறந்தபோது 15 நாட்கள் பரோலில் வந்த சசிகலா, 10 நாட்களிலேயே மீண்டும் சிறைக்குத் திரும்பிவிட்டார். இதையெல்லாம் கணக்கில் எடுத்துத்தான் இப்போது சில முயற்சிகளைச் செய்கிறார்கள்.’’

‘‘நீதிமன்றம் மூலமாகவா?’’

‘‘அந்தக் கதவுதான் இறுக்கமாக அடைபட்டுள்ளதே! உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்ட சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அதன்பிறகு மறுசீராய்வு மனு போடும் வழி இருந்தது. அதற்காக டெல்லியில் பலரிடம் தினகரன் பேசிப்பார்த்தார். உயிருடன் இருந்த காலத்தில் நடராசனும் சில முயற்சிகளைச் செய்துபார்த்தார். எங்கும் நல்ல பதில் கிடைக்கவில்லை. நடராசன் இறந்தபோது பரோலில் வந்து சசிகலாவை வடமாநிலத் தொழிலதிபர் ஒருவர் சந்தித்துப் பேசினார். அவர் மூலமாகவும் சில முயற்சிகளை எடுத்துப் பார்த்தார்கள். எதிலும் சாதகமான பதில் கிடைக்காததால், மறுசீராய்வு மனு போடும் முயற்சியையே ஒத்திவைத்துவிட்டார்கள்.’’

‘‘வேறு எங்கே வழி பிறந்திருக்கிறது?’’

‘‘கர்நாடக முதல்வர் குமாரசாமிதான் அந்த வழி. முதல்வராக ஆவதற்கு முன்பிருந்தே குமாரசாமியை இளவரசியின் மகன் விவேக் சென்று சந்தித்து அறிமுகம் செய்துகொண்டிருக் கிறார். பெங்களூரில் ஒருமுறையும், டெல்லியில் ஒருமுறையும் இந்த சந்திப்புகள் நிகழ்ந்தன. முதல்வரான பிறகும் குமாரசாமியை இரு முறை சந்தித்துப் பேசியிருக்கிறார் விவேக். சசிகலா மற்றும் தன் அம்மா இளவரசி ஆகிய இருவரின் விடுதலை குறித்தும் இந்த சந்திப்புகளின்போது பேசினாராம் விவேக். மாநில அரசு நினைத்தால், நன்னடத்தையைக் காரணம் காட்டி எந்தக் கைதியின் தண்டனைக் காலத்தையும் குறைக்க முடியும். சிறையில் இருந்த காலத்தை சிறை விதிகளின்படி கணக்கிட்டால், சுமார் இரண்டு வருடம் வரை சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டார் சசிகலா. விதிப்படி, 2020 ஆகஸ்ட் மாதத்தில் அவர் விடுதலையாகி வெளியே வர வேண்டும். ஆனால், கர்நாடக அரசு அவரை முன்கூட்டியே விடுதலை செய்துவிடும் என்கிறார்கள். சிறை விதிகளை மீறி சலுகைகளை அனுபவித்ததாக, சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா செய்த ஆய்வின் அடிப்படையில் சசிகலாவிடம் விசாரணை நடந்திருக்கிறது. நன்னடத்தை அடிப்படையில் அவரை விடுதலை செய்வதற்கு இந்த விசாரணைதான் தடையாக இருக்கிறது. இதைக் குறிப்பிட்டு, ‘இந்த விசாரணையை எப்படியாவது முடித்துவிட்டு விடுதலைக்கான சூழலை ஏற்படுத்தலாம்’ என சசிகலா குடும்பத்துக்கு உத்தரவாதம் தரப்பட்டுள்ளதாம்.’’

‘‘இது தமிழகத்தை ஆள்பவர்களுக்குத் தெரியுமா?’’

‘‘உளவுத்துறை சும்மா இருக்குமா? அவர் வெளியில் வந்தால் கட்சியையும் ஆட்சியையும் ஆட்டம்காண வைத்துவிடுவார் என்பது புரிந்துவிட்டது. அதனால்தான், சசிகலாமீது நடைபெற்றுவரும் அன்னியச் செலாவணி மோசடி வழக்கை அடுத்த அஸ்திரமாகப் பயன்படுத்த ஆளும் தரப்பில் முயற்சிகள் நடக்கின்றன.’’

‘‘அது இருக்கட்டும். பன்னீர்செல்வம் ஏதோ புரட்சிக்கொடி தூக்கிக்கொண்டிருப்பதாகப் பேச்சு அடிபடுகிறதே?’’

‘‘அவ்வப்போது இப்படி ஏதாவது அடிபடத்தான் செய்கிறது. கடைசியில் பார்த்தால், அவருக்குத்தான் அடிமேல் அடி விழுகிறது. இம்முறை, அமைச்சரவையை மாற்றவேண்டும் என்று குரல் கொடுத்துள்ளார். ‘சீனியர்களாக இருக்கும் 10 பேரையாவது அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவித்து, கட்சிப்பணிக்கு அனுப்ப வேண்டும். தினகரனின் அ.ம.மு.க மின்னல் வேகத்தில் செயலாற்றிக்கொண்டுள்ளது. எனவே, அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கையைத் துரிதப்படுத்த, துணிச்சலான மந்திரிகளில் சிலரை விடுவிக்கலாம்’ என்று கூறினாராம் ஓ.பன்னீர்செல்வம்.’’

‘‘இதில் உள்குத்து இருக்கிறதோ?’’

‘‘இல்லாமலா? இப்போதைக்குக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்கிற பதவியில்தான் இருக்கிறார் பன்னீர். துணை முதல்வர் பதவிக்கு அவர் இறக்கப்பட்டபோது, ‘பொதுச்செயலாளர் பதவி விரைவில் வழங்கப்படும்’ என்றுதான் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், இதுவரை அதைப்பற்றிய பேச்சே இல்லை. டெல்லியில் முட்டிமோதியும் மண்டைதான் உடைந்தது. இந்நிலையில், தன்னுடன் ஏற்கெனவே இருந்த 10 எம்.எல்.ஏ-க்களில் இன்னும் சிலருக்கும் அமைச்சர் பதவிகளையாவது வாங்கித்தர நினைக்கிறார். அதனால்தான், இப்படி கட்சிப்பணி என்கிற பெயரில் அம்புவிட்டுப் பார்க்கிறார். ஆனால், ஏற்கெனவே அமைச்சர்களாக இருப்பவர்கள் எல்லாம் அசகாய சூரர்கள் என்பதால், பன்னீரின் குரல் எடுபடுவது போலத் தெரியவில்லை. மனிதர் நொந்துபோயிருக்கிறாராம்.’’

‘‘கிட்டத்தட்ட அழகிரி போல என்று சொல்லும்!’’

‘‘ம்… அழகிரியைப் பற்றி உமக்கு செய்தி வேண்டும். அப்படித்தானே? செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் நடத்தவிருக்கும் அமைதிப் பேரணிதான் அவருடைய தற்போதைய ஒரே இலக்கு. அதனால்தான், ஸ்டாலின் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுத்த சமயத்தில்கூட, எந்த எதிர்ப்பையும் காட்டாமல் வாயை மூடிக்கொண்டாராம். பேரணிக்குப் பிறகும் ஸ்டாலின் தரப்பிலிருந்து உருப்படியான பதில் இல்லையென்றால், அழகிரியின் ஆட்டம் ஆரம்பமாகும் என்கிறார்கள்.’’

‘‘தி.மு.க-வின் 63 மாவட்டச் செயலாளர்கள் உட்பட அதிகாரபூர்வமான அனைத்து நிர்வாகிகளும் ஸ்டாலின் பின்னால் திரண்டுவிட்டார்கள். அதன்பிறகு இவர் என்ன ஆட்டமாடப் போகிறார்?’’

‘‘இப்போதும்கூட, ‘தலைவர்கள்தான் ஸ்டாலின் பக்கம்… தொண்டர்கள் என் பக்கம் என்பதை அந்தப் பேரணியில் நிரூபிப்பேன்’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் அழகிரி, கைவசம் சில ஆவணங்களை வைத்திருக்கிறாராம். அவற்றை வைத்துத்தான் ஆட்டம் ஆரம்பமாகுமாம். அவையெல்லாம் தி.மு.க நிதி தொடர்பான ஆவணங்கள். அது எப்படியெல்லாம் தனிநபர்களுக்கு வெளியில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் திரும்ப வராமல் போனது எவ்வளவு என்பதெல்லாம் அதில் இருக்கிறதாம். முக்கியமாக வடமாவட்ட தி.மு.க-வைச் சேர்ந்த முக்கியமான இரண்டு தலைகளை இதில் உருட்டுகிறார் அழகிரி.’’

‘‘லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி-யான முருகன், பாலியல் புகாரில் சிக்கிய விவகாரம் எந்த அளவில் இருக்கிறது?’’

‘‘இதில் புகார் கொடுத்த பெண் எஸ்.பி-யை வேறு துறைக்கு மாற்றிவிட்டனர். ‘குற்றம்சாட்டப்பட்ட முருகனை மட்டும் ஏன் மாற்றவில்லை? இவரை அதே பதவியில் வைத்துக்கொண்டு விசாகா கமிட்டி எப்படி விசாரணையை நியாயமாக நடத்த முடியும்?’ என்று வினா எழுப்புகிறார்கள் பெண் போலீஸ் உயர் அதிகாரிகள். இவர்கள் ஓர் அணியாகவே திரண்டு நிற்கிறார்கள். தற்போது, சி.பி.சி.ஐ.டி விசாரணையில் இருக்கும் இன்னொரு பெண் எஸ்.பி-யின் புகார் விவகாரத்தையும் இவர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள். இந்த விவகாரத்திலும், புகார் கொடுத்த பெண் எஸ்.பி-யை திடீரென மாற்றிவிட்டனர். குற்றம்சாட்டப்பட்ட ஐ.ஜி-யோ, முருகனைப் போலவே அதேபதவியில் நீடிக்கிறார். ‘புகார் கொடுப்பவர்கள் பந்தாடப்படுகிறார்கள், குற்றம்சாட்டப் பட்டவர்கள் கொண்டாடப்படுகிறார்கள். ஏன் இந்த பாரபட்சம்’ என்று பெண் போலீஸார் மத்தியில் எழுந்துள்ள கொந்தளிப்பு, கொஞ்சம் கொஞ்சமாக பரவ ஆரம்பித்துள்ளது’’ என்ற கழுகார் பறந்தார்.


டி.வி சீரியல்களில்தான் ‘இவருக்கு பதில் இவர்’ என்று காட்டுவார்கள். ஆகஸ்ட் 30-ம் தேதி சென்னையில் தி.மு.க நடத்தும் கருணாநிதி புகழஞ்சலிக் கூட்டத்தில் பி.ஜே.பி சார்பில் தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு பதிலாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்கிறார். இடையில் என்ன நடந்தது என விசாரித்தால், ஷாக் அடிக்கும் தகவல் ஒன்றைச் சொல்கிறார்கள். மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன்தான் இதற்காக லாபி செய்திருக்கிறார். அவரின் நண்பர்கள் தரப்பிலிருந்து அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்களாம். அந்த சந்திப்பில் வருவதாக எந்த உறுதிமொழியையும் அமித் ஷா தரவில்லையாம். ஆனால், ‘அமித் ஷா சம்மதித்துவிட்டார்’ என சென்னைக்கு அங்கிருந்து தகவல் வந்துவிட்டது. அதை நம்பி அழைப்பிதழ் அச்சிட்டுவிட்டார்களாம். அதன்பிறகுதான், நடந்த குழப்பங்கள் அனைத்தும் அறிவாலயத்துக்குத் தெரியவந்தன.

அவசரமாக வேறு ரூட்டில் நிதின் கட்கரியிடம் பேசிவிட்டார்கள். இனி டெல்லி லாபி வேலைகளையெல்லாம் சபரீசன் மேற்கொள்வதற்குத் தடை விழுமாம். டெல்லியைப் பொறுத்தவரை கனிமொழிதான் இனியெல்லாமே என்று பேசி முடித்துவிட்டார்களாம்.

கடைசியில் சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்டியதுதான் உண்மை என்றாகிவிட்டது!


 தென் சென்னையில் பெரிய பதவிக்கு சமீபத்தில் வந்திருக்கும் போலீஸ் அதிகாரி, இதற்காகக் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காய்நகர்த்தி வந்தாராம். இவரின் மைத்துனர், டெல்லியில் சட்டம் தெரிந்த வட்டத்துடன் நெருக்கமானவர். அண்மையில் பணிமாற்றம் ஆன நீதித்துறை பிரமுகருக்கு டெல்லியிலிருந்து பிரஷர் வர, வழியனுப்பும் விழாவின்போது, அவர் ஆட்சி மேலிடத்தின் காதில் போட்டாராம். அதன்பிறகுதான், நியமன உத்தரவு வந்ததாம். ஸ்வீட் எடு, கொண்டாடு!

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் சிறிய குழு ஒன்று பொறியாளர்களை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக இந்த வாரியத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்து பெரும் ஊழல் செய்து இந்தக் குழு கொழிக்கிறது. அவர்களின் கொட்டத்தை அடக்க, இந்த வாரியத்தின் தலைவர் நஜிமுதீன் பெரும் முயற்சி மேற்கொண்டார். ஆனால், அவருக்கு நெருக்கடி கொடுத்து விரட்டிவிட்டார்கள் அங்குள்ள ஊழல் பெருச்சாளிகள்.

 பள்ளிக்கல்வித் துறையில் பாடத்திட்ட செயலாளராக இருந்த உதயசந்திரனின் ட்ரான்ஸ்ஃபர், நீதிமன்ற அவமதிப்பு சிக்கலில் தமிழக அரசைத் தள்ளியிருக்கிறது. காஞ்சிபுரம் ராமலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, உதயசந்திரனை மாற்றுவதற்கு தடை ஆணை பெற்றார். ஓராண்டு கழித்து இப்போது, அவர் தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி, ‘புதிய பாடத்திட்டத்தை உருவாக்க நியமிக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றுள்ள உதயசந்திரனை பணிமாற்றம் செய்யவோ, அல்லது அக்குழுவில் உள்ள பிற நபர்களின் பெயர்களை நீக்கவோ தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. இந்தப் பணிகள் குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை தர வேண்டும்’ என்று உத்தரவிட்டார். இதைச் சுட்டிக்காட்டி இப்போது நீதிமன்றத்துக்குப் போக சிலர் தயாராகிவருகிறார்கள்.

நன்றி –ஜூனியர் விகடன்


Share this page