துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் நேற்று திடீரென சந்தித்துப் பேசினார்.
அதிமுகவில் முதல்வர் கே.பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும், இரு வரது ஆதரவாளர்கள் இடையே அவ்வப்போது கோஷ்டி மோதல் ஏற்பட்டு வந்தது.
வடசென்னையில் நடந்த மீனவ கூட்டுறவு சங்கத் தேர்த லில் அதிமுகவில் கோஷ்டிப் பூசல் ஏற்பட்டது. இந்த சூழலில், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் இன்று பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளார்.
இதற்கிடையே, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை மதுசூதனன் நேற்று இரவு திடீரென சந்தித்துப் பேசினார். அவர் இன்று முதல்வரையும் சந்தித்துப் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது. மதுசூதனனின் இந்த திடீர் சந்திப்பு அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.