அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ஜாக்சன்வில்லே என்ற இடத்தில் வீடியோகேம் விளையாட்டு போட்டிகள் நேற்று நடைப்பெற்றன. அப்போது, மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து கண்மூடித்தனமாக சுடத்தொடங்கினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயமடைந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையின் படி 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடைபெற்ற ஜேக்னோவில் பகுதி வழியாக பொதுமக்கள் செல்ல வேண்டாம் என காவல்துறையினர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபர் சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அந்த விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர் எனவும், தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. பார்வையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபின், அந்த நபர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு, தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.