Select Page

City Union Bank



Share this page

காவிரி ஆற்றில் மழை நீர் வீணாக கடலில் சென்று கலப்பதை தடுக்க இந்த ஆண்டு ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும் என்று, வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
காவிரி மற்றும் பவானி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆறுகளின் கரையையொட்டி அமைந்துள்ள ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்து உள்ளது. அந்த பகுதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். பவானி தேவபுரம் பகுதியில் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று பாதிக்கப்பட்ட குடியிருப்புகளை பார்வையிட்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களையும் பார்த்து ஆறுதல் கூறினார்.மேலும் அவர் கூறுகையில்

காவிரி நதிநீரை பொறுத்தவரை, நம்முடைய நிலப்பகுதி சமவெளி பரப்பாக இருக்கின்ற காரணத்தினாலே தடுப்பணை கட்டமுடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. கொள்ளிடம் ஆற்றில், ஆதனூர் குமாரமங்களம் என்ற இடத்திலே, மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா ரூ.400 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்படும் என்ற அறிவிப்பை தந்து அந்த பணிகள் துவங்கப்பட்டு இருக்கின்றன. அங்கே, சில பட்டாதாரர்களிடத்திலே பேசி, ஒருமித்த கருத்து ஏற்பட்டு, நிலம் கையகப்படுத்தப்பட்டவுடன் விரைவாக அந்த பணிகள் துவங்கும்.

இப்படி, தமிழ்நாடு முழுவதும், பருவகாலங்களில் பொழிகின்ற மழைநீரை முழுமையாக சேமித்து வைக்க வேண்டும் என்பதற்காக ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்புப் பொறியாளர்களைக் கொண்ட ஒரு குழு 3 மாதத்திற்கு முன்பு அமைக்கப்பட்டு, அந்த குழு தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்து, ஆய்வறிக்கையை இன்னும் ஒரு சில மாதங்களில் அரசுக்கு சமர்ப்பிக்க இருக்கின்றார்கள்.

அவர்கள் சமர்ப்பித்தவுடன், தேவையான இடங்களில் தடுப்பணை கட்டப்பட்டு, பொழிகின்ற மழைநீர் முழுவதும் தேக்கிவைக்கப்படும். அதுமட்டுமல்ல, பொழிகின்ற மழைநீர் முழுவதும் சேமிக்கப்பட வேண்டும் என்பதற்காக 3 ஆண்டு கால திட்டத்தின் கீழ் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதற்கட்டமாக, இந்த ஆண்டு ரூ.292 கோடியில் 62 தடுப்பணை கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. அந்த பணிகள் எல்லாம் விரைவாக துவங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.


Share this page