ரேஷன் கடைகளின் ஊழியர்கள், கூட்டுறவு துறை அமைச்சரை சந்தித்து, கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றும்படி வலியுறுத்தினர்.தமிழகத்தில், கூட்டுறவு ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த திங்களன்று, வேலைநிறுத்த போராட்டம் அறிவித்தனர். முன்னதாக, ஞாயிறு இரவு, கூட்டுறவு துறை அதிகாரிகள், சங்க நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சில், ஊதிய உயர்வு வழங்க குழு அமைப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், சென்னை, தலைமை செயலகத்தில், கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு, செயலர் குமார் ஜெயந்த் உள்ளிட்ட உயரதிகாரிகளை, ரேஷன் ஊழியர்களின் அனைத்து சங்க நிர்வாகிகள், நேற்று சந்தித்து பேசினர்.சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘கூட்டுறவு துறை அமைச்சரின் அழைப்பை ஏற்று, அவரிடம், ஊழியர்களின் கோரிக்கைகள், அதற்கு அதிகாரிகள் தெரிவித்த விபரங்களை விளக்கினோம். ‘அவற்றை, முதல்வரிடம் தெரிவித்து, இரு மாதங்களில், நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக, அமைச்சர் தெரிவித்தார்’ என்றனர்.